சென்னை: தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், தான் எடுத்து வரும் நடவடிக்கையால் சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், நில மோசடி வழக்கு, கிரானைட் முறைகேடு, அரிசி கடத்தல் தடுப்பு உள்ளிட்ட விஷயங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்றும், இது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., கேட்டுக்கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில், கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின், 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், இன்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.
இன்றைய கூட்டத்தில் பேசிய முதல்வர்: தமிழகத்தில் ஏழை மக்களை கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வருகிறோம். ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை அரசு கருத்தில்கொண்டுள்ளது. விலையில்லா அரிசி வழங்குவதற்கு 3 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரிசி கடத்தல், ஜாதி மோதல் :
இதுவரை 16 ஆயிரத்து 272 நில மோசடி வழக்கு பதியப்பட்டு உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு ரூ. 836 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிரானைட் முறைகேடு தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு ரூ. 9 ஆயிரத்து 783 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தல், ஜாதி மோதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
இது போன்று மக்கள் நலனுக்காக செயல்படும் அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குற்றங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெ., பேசினார்.
No comments:
Post a Comment